Published Date: September 8, 2023
CATEGORY: CONSTITUENCY

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி அளித்து தகுதியானவர்களை உருவாக்கி உலக அளவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர உதவியாக இருக்கிறோம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
கருத்தரங்கு
தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத் துறை நிறுவனத்தின் 'பிரிட்ஜ் 23' கருத்தரங்கு கோவை தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசியதாவது :
நான் கல்லூரியில் படிக்கும் போது ஆண்டுக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் என்ஜினீயர் பட்டதாரிகள் மட்டுமே வெளியே வந்தனர். ஆனால் கடந்த 2016ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான 2 லட்சத்து 40 ஆயிரம் இடங்கள் இருந்த நிலையில் 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டது. கடந்த இரண்டு தலைமுறைகளாக 40 மடங்கு என்ஜினீயரிங் பட்டதாரிகள் கூடுதலாக உருவாகி உள்ளனர். மேலும் நான் படிக்கும் போது 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையிலான மாணவர்கள் வெளிநாடு சென்றனர்.
சம்பளம் குறைவு
தற்போது படித்து முடித்து விட்டு வெளியே வரும் பட்டதாரிகளுக்கு அனுபவமும், சம்பளமும் குறைவாக உள்ளது. இப்போது உள்ள மாணவர்கள் முதல் தலைமுறை என்ஜினீயரிங் பட்டம் படிக்கிறார்கள். போதிய அனுபவம் இல்லாத ஆசிரியர்கள், பெற்றோர்கள் பட்டதாரிகளாக இல்லாமல் இருப்பதன் காரணமாக மாணவர்களின் லட்சியம் குறைவாக உள்ளது.
அவர்களுக்கு படித்து முடித்தால் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற எண்ணம் இருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் 7 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள்.
நான் முதல்வன் திட்டம்
அதற்கு பத்தாம் வகுப்பு தகுதியாக உள்ள நிலையில், சம்பளம் குறைவாக இருந்தாலும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதனால் திறமையானவர்கள் தங்கள் தகுதிக்கு குறைந்த வேலையை செய்கின்றனர். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு கழகம் ஆகியவை தொழிற்சாலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு உலக தரம் வாய்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களை தகுதியானவர்களாக மாற்றி உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு பெற்று தருவதற்கு உதவியாக இருக்கிறது. தோல்வி என்பது சிறந்த அனுபவம் என்பதை உணர வைக்கும். எனக்கு சிறந்த அனுபவத்தை தோல்வி வழங்கி இருக்கிறது. நான் இரண்டு நிறுவனங்களை விற்ற பிறகும் தோல்வியை கண்டு அஞ்சாமல் அனுபவமாக எடுத்துக்கொண்டு முன்னேறி வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய தகவல் தொழில்நுட்பம் கட்டிடம்
முன்னதாக விளாங்குறிச்சி தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114 கோடியே 16 லட்சத்தில் புதிய தகவல் தொழில்நுட்பம் கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார். இந்த கட்டிடம் 4 ஏக்கர் பரப்பளவில் 8 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு அமைக்கப்பட்டு வரும் அலுவலக கட்டமைப்பு பணிகள், தீயணைப்பு வசதிகள், வாகன நிறுத்துமிட வசதிகள், மழைநீர் சேமிப்பு வசதிகள், உள்ளிட்டவற்றை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவு விட்டார்.
அப்போது எல்காட் மேலாண்மை இயக்குனர் அனிஷ் சேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், டைட்டில் பார்க் நிர்வாக செயலாளர் கீதா உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் .
Media: DAILYTHANTHI